நெல்லை கவின் கொலை வழக்கு: காதலியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.;
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் பாளையங்கோட்டை அருகே கே.டி.சி.நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவினை பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினரான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது.
அதாவது, சுர்ஜித்தின் அக்காள் சுபாஷினியை கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சேர்த்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் கவினின் காதலியான சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மீண்டும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் சுபாஷினியிடம், கவினை யார் அங்கு வரவழைத்தது? அவரை அங்கிருந்து யார் அழைத்து சென்றது? கவினுடன் அப்போது யாரெல்லாம் வந்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கொலை நடந்த இடத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பார்வையிட்டனர். மேலும் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து துப்பு துலக்கினர்.
இதற்கிடையே சுர்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.