நம்பிக்கை மோசடி வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவானவர் கர்நாடகாவில் கைது

நாங்குநேரி பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம், மேனேஜராக பணிபுரிந்த உடுப்பியை சேர்ந்த ஒருவர் குற்றமுறு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.;

Update:2025-08-03 08:48 IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, சிங்கனேரி பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தனியார் கம்பெனி நடத்தி வந்த, கேரளாவைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரிடம், மேனேஜராக பணிபுரிந்த, உடுப்பியை சேர்ந்த தாமஸ் குற்றமுறு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வினோத்குமார் நாங்குநேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு தாமஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் வழக்கின் புலனாய்வு முடிக்கப்பட்டு, நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தாமஸ் கடந்த 24.4.2012 முதல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

தாமஸை கைது செய்து பிடியாணையை நிறைவேற்ற திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன் பேரில், நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன் தலைமையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனையடுத்து தாமஸ் சம்பந்தமான தகவல்கள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான தனிப்படையினர் கர்நாடக மாநிலம் சென்று தாமஸை கைது செய்தனர்.

13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த பிடி ஆணையினை நிறைவேற்றி குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்