சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு; அரசின் அறிக்கையை ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது வரை 713 கிராமங்களில் மட்டும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட கிராமங்கள், மாவட்டங்களின் விவரங்கள் இல்லாததால் தமிழக அரசின் அறிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முறையாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 29-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.