ஒழுங்கா தமிழில் பேசுமா... வைரலான சிறுவனின் கெஞ்சல் வீடியோ
வீடியோவுக்கு 800-க்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.;
சிறுவன் ஒருவனிடம் அவனுடைய தாய் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது பிடிக்காமல், அந்த சிறுவன் அழுது கொண்டே, ஒழுங்கா பேசுமா என கூறுகிறான். அதற்கு, அழக்கூடாது என ஆங்கிலத்தில் கூறியபடியே, ஒழுங்காக என்றால் எப்படி? என அவர் தமிழில் கேட்கிறார்.
அதனை பிடித்து கொண்ட அந்த சிறுவன் இப்படி, இப்படிதான் பேசுவாங்க என்கிறான். திரும்பவும் சிறுவனிடம் அந்த தாய் ஆங்கிலத்தில் பேச இப்போது, தமிழில் பேசு என்று சிறுவன் கூறுகிறான். ஆங்கிலத்தில் பேசுவது பிடிக்கவே இல்லை என்றும் கூறுகிறான்.
அதற்கு அந்த தாய் பள்ளியில் ஆசிரியர் எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா என கேட்க, சிறுவன் யோசித்தபடி ஆங்கிலத்தில் என பதில் கூறுகிறான். உடனே அந்த தாய், அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என ஆங்கிலத்தில் கூற, அதற்கு சிறுவனோ நான் சொன்னத கேளு என மழலையாக கூறுகிறான்.
அந்த தாய் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேச சிறுவன் தலையில் அடித்து கொண்டு அழுகிறான். அதனுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. இதற்கு 800-க்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்து உள்ளனர். 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிறுவன் பள்ளியில் படித்து விட்டு வீட்டுக்கு வந்தபின்பும், ஆங்கிலத்திலேயே பேசினால், அவனுக்கு பள்ளி நினைவுதான் வரும் என ஒருவரும், ஆங்கிலத்தில் பேசுகிறேன் என கூறிக்கொண்டு அதனை தவறாக பேசுகின்றனர் என மற்றொருவரும், தனக்கு ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்ள இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒருவரும் தங்களுடைய விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.