நெல்லையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-08-18 09:03 IST

கோப்புப்படம் 

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் அசோக்குமார் (38 வயது). இவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது நெல்லை பாளையங்கோட்டை அருகே தியாகராஜநகரை அடுத்துள்ள ராஜகோபாலபுரம் சாய்பாலாஜி கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார்.

அசோக் குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று நகை, வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்