தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது
அக்டோபர் 15-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்தனர்.;
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களில் பலர் ரெயில்களில் செல்வார்கள். தற்போது ரெயில் டிக்கெட்டுகள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17-ம் தேதியே செல்வார்கள். எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, அக்டோபர் 17-ந்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும் (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்கள் வருகிற 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும், அக்டோபர் 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 21-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.
முன்னதாக அக்டோபர் 16-ந்தேதி (வியாழன்) அன்று சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்கள்...
தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதியும், அக்டோபர் 22-ந்தேதி (புதன்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 23-ந்தேதி முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 23-ந்தேதி (வியாழக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 24-ந்தேதியும், அக்டோபர் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 25-ந்தேதியும், அக்டோபர் 25-ந்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 26-ந்தேதியும், அக்டோபர் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 27-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் ரெயில் கால அட்டவணையின்படி முன்பதிவு செய்யலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவுகளும் தொடங்குகிறது.
இதேபோல தீபாவளி ரெயில்களுக்கான முன்பதிவுகளை பொறுத்து சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 15-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்தனர்.