குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;
தென்காசி,
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் சுதந்திர தினம் என்பதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது .
இந்த நிலையில், அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதே சமயம் ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.