மதுபோதையில் நடந்த கொடூரம்.. 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன்
மதுபோதையில் இருந்து அந்த நபர், 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.;
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 51 வயதானவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மாமியாரான 75 வயது மூதாட்டி அவர்களுடன் வசித்து வருகிறார். அந்த மூதாட்டி தனது மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்து கொடுத்து வந்ததுடன், அவர்கள் 2 பேரையும் நன்றாக கவனித்து வந்தார்.
கூலிதொழிலாளிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வந்த அவர் தனது அறைக்கு தூங்க சென்றுவிட்டார். 75 வயது மூதாட்டியும் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் மூதாட்டி பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த மூதாட்டியின் பேரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது மதுபோதையில் இருந்து தனது தந்தை, பாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினார். இதற்கிடையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தொழிலாளியை மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து வந்த கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பாலியல் விவகாரம் என்பதால் இதுகுறித்து கோவை மாநகர மத்திய மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர்.