திருநங்கை போலீஸ் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் திருநங்கை போலீஸ் வீட்டில் மர்ம ஆசாமிகள் நகைகளை திருடிச்சென்றனர்.;
கோப்புப்படம்
புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சம்யுக்தா (29 வயது). திருநங்கையான இவர் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் ‘பி' பிளாக்கில் 2-வது தளத்தில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆகும்.
இவர் நேற்று காலை பணிக்கு வருவதற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை, வீட்டுவாசலில் உள்ள காலணியில் மறைத்து வைத்து விட்டு வந்தார். பின்னர் பணி முடிந்து மதியம் வீட்டிற்கு சென்றார். அப்போது காலணியில் வீட்டின் பூட்டு சாவியை தேடிய போது அதில் இல்லை. சாவி காணாததை கண்டு திடுக்கிட்டார்.
இதையடுத்து சம்யுக்தா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது பீரோவில் வைத்திருந்த 10¾ பவுன் தாலிச்சங்கிலி, 1 பவுன் சங்கிலி, வைரத்தோடு 1 ஜோடி ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து நகைகளை திருடிச்சென்றிருக்கலாம் என கருதினார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததையும், காலணியில் சாவியை மறைத்து வைத்திருப்பதையும் நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் காவலர் குடியிருப்பில் போலீஸ் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.