மிட்டாய் வாங்க வந்த 10 வயது சிறுமி பலாத்காரம் - பெட்டிக் கடைக்காரர் கைது
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக் கடைக்காரரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் சேர்மன் (54 வயது). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக வந்துள்ளார். கடையில் இருந்த சேர்மனிடம் மிட்டாய் கேட்டார்.
அப்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் தனிமையை பயன்படுத்தி சேர்மன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என சேர்மன் அந்த சிறுமியை மிரட்டினார்.
அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்ற சிறுமி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதை கவனித்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சேர்மனை போக்சோ வழக்கின்கீழ் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.