ஆடி மாத வரலட்சுமி விரதம்; நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் சுமங்கலி பூஜை
பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல் மாங்கல்ய கயிறு உள்ளிட்வை வழங்கப்பட்டன.;
நெல்லை,
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி மாதம் வரலெட்சுமி விரதத்தையொட்டி அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் 1,008 சுமங்கலிகள் பங்கேற்கும் பூஜை நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் மகாலட்சுமி உருவங்கள் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து 1008 சுமங்கலிகள் ஆயிரம் கால் மண்டபத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டு, அவர்கள் முன் கும்ப கலசங்கள், கண்ணாடி, மஞ்சள் கயிறு, மங்கலப் பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் மாங்கல்ய பலன் அமையவும், குழந்தைபேறு கிடைக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருணம் நடைபெறவும், இல்லங்களில் சுபகாரியங்கள் நடைபெறவும், பூவுலகில் சுபிட்சமாக இருக்கவும் மகா சங்கல்பம் செய்யப்பட்டது.
அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மகாலட்சுமி தாயாருக்கு குங்குமம் மற்றும் மலர்களால் ஸ்ரீசுக்த ஸ்தோத்திரம் 1008 லலிதா சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது. அதேபோல் சுமங்கலி பெண்களும் தங்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு அர்ச்சனை செய்தனர். பூஜை முடிவில் மகாலட்சுமிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல் மாங்கல்ய கயிறு உள்ளிட்வை வழங்கப்பட்டன.