முதல் நாள் ஆஸ்தானம்.. 2-ம் நாள் உறியடி உற்சவம்: திருப்பதியில் கோகுலாஷ்டமி விழா ஏற்பாடுகள்
உறியடி உற்சவத்தை காண்பதற்காக மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் தனித்தனி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி வருகை தருகின்றனர்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோகுலாஷ்டமி விழா நடத்தப்படுகிறது. முதல் நாளான 16-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்கவாசல் முக மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடத்தப்பட உள்ளது.
அப்போது தங்க சர்வபூபால வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரை எழுந்தருளச் செய்து நிவேதனம் சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும் உக்ர சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
இரண்டாம் நாள் (17-ந்தேதி) திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உறியடி உற்சவம் நடக்கிறது. உறியடி உற்சவத்தை காண்பதற்காக அன்று மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி தங்கத் திருச்சி வாகனத்திலும், மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து கோவில் எதிரே உறியடிக்கும் இடத்திற்கு வருகை தருகிறார்கள்.
உறியடி உற்சவத்தில் திருமலை பாலாஜிநகர் பகுதியில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்கள் பலர் பங்கேற்று உறியடித்து பக்தர்களை மகிழ்விப்பர்.
கோகுலாஷ்டமி விழாவையொட்டி திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 17-ந்தேதி நடக்கவிருந்த ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.