மனங்களை மகிழ்விக்கும் கிருஷ்ண ஜெயந்தி

குழந்தைப் பருவத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டிய கிருஷ்ணர் அவதரித்த தினம், பக்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகும்.;

Update:2025-08-12 11:16 IST

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும்போது, ஒரு அசரீரி கேட்டது. “கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்” என்று ஒலித்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், “எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசுதேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்றுவிடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார்.

அன்று இரவு வசுதேவரின் கனவில் தோன்றிய விஷ்ணு, “உனக்கு பிறக்கப்போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா” என்று கூறினார்.

சிறையில் தேவகி-வசுதேவர் தம்பதியருக்கு ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. பகவான் மகா விஷ்ணுவே குழந்தையாக அவதரித்தார். பகவானின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். பகவானின் மகிமையை உணர்ந்த வசுதேவர், குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.

வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. அனைவரும் மயங்கி கிடந்தனர். வீடே நிசப்தமாக இருந்தது. உள்ளே நுழைந்த வசுதேவர், மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார்.

சிறைச்சாலையில் அவரது அறைக்குள் நுழைந்ததும், சிறைக் காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.

உடனே விரைந்து வந்த கம்சன், “என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா?" என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தையோ அந்தரத்தில் நின்றபடி கம்சனை எச்சரித்தது. “உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னைக் கொல்வான்” என்று கூறி மாயமாக மறைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில், தன் தங்கையின் குழந்தை கண்ணன் (கிருஷ்ணர்) என்ற பெயரில் வளர்ந்து வருவதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, சகடாசுரன் என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே வதம் செய்தார் கிருஷ்ணர்.

அதேசமயம், கோகுலத்தில் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார் கிருஷ்ணர். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டிய கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியுடன் கூடிய நாள், பக்தர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகும். அவ்வகையில், இந்த ஆண்டு 16-8-2025 அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாதச் சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாக நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும். 

Tags:    

மேலும் செய்திகள்