சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முதல் முறையாக நடைபெற்ற தேரோட்டம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.;
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா, கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சக்தி அளித்தல், அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல் உள்ளிட்ட சிறப்பு வைபவங்களும் நடைபெற்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொங்கல் வைத்தும், ஆடு கோழி பலியிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த சில வருடங்களாகவே, கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவின்போது அம்மன் திருவீதி உலா பல்லக்கில் வைத்து நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து வீதியுலா நடத்த முடிவு செய்யப்பட்டு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான தேர் செய்யப்பட்டது. இந்த புதிய தேர், கடந்த மாதம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த தேரில் கோட்டை மாரியம்மன் முதல் முறையாக இன்று எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. பின்னர் உற்சவமூர்த்தியான கோட்டை மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து வேதங்கள் முழங்க மந்திரங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதிகளின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த தேரானது முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீராராதனை நடைபெற்றது.