தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம்
தாடிக்கொம்பில் நடைபெற்ற ஆடித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.;
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின ஆடிப் பெருந்திருவிழா கடந்த 1 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி சௌந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 7-ந் தேதி வியாழக்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை ஒட்டி மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு தம்பதியர் கோலத்தில் சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன், சண்முகவேல் மில்ஸ் குழும அதிபர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆகியோர் கொடி அசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். இன்று தீர்த்தவாரியும், நாளை மாலை தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.