விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
விவசாயம் செழிக்க வேண்டி விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் நடைபெற்ற கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலத்தில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.;
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் 85-வது அவதார விழாவையொட்டி, மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடந்தது. வேள்வியை திருவிக சக்தி பீட வேள்விக்குழு பொறுப்பாளர் ஜெ.பத்மா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானத்தை மன்ற தலைவர் விஜயலெட்சுமி வழங்கினார்.
மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி எடுத்து ஆன்மிக ஊர்வலமாக வந்தனர். ஆன்மிக ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வழியாக மன்றத்தை வந்தடைந்தது. அங்கு அன்னைக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை அணிந்து, ஆலய நிர்வாகி மாரிமுத்து தலைமையில் குத்தாலம் கடைவீதியில் அமைந்துள்ள மன்மதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கஞ்சி கலயம் மற்றும் தீசட்டி முளைப்பாரி ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். வழிபாட்டு மன்றத்தை அடைந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.