திருப்பதியில் ஆடி பௌர்ணமி கருடசேவை

இந்த மாதத்தின் பௌர்ணமி கருட சேவையானது, பிரம்மோற்சவ விழா கருட சேவைக்கு முன்னதாக நடைபெறும் சோதனை ஓட்டம் ஆகும்.;

Update:2025-08-10 10:53 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர ஆபரணங்களாலும், பல வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வீதிஉலாவின்போது மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவில் திருப்பதி பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கருட சேவையை தரிசனம் செய்தனர்.

இந்த மாதத்தின் பௌர்ணமி கருட சேவையானது, செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கருட சேவைக்கு முன்னதாக நடைபெறும் சோதனை ஓட்டம் ஆகும்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். பிரம்மோற்சவத்தின்போது அதிக அளவிலான பக்தர்கள் கருட சேவையை தரிசனம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்