இதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தேவன்
துக்கத்தோடு பிறந்த யாபேஸ் வளர்ந்த பிறகு தன் சகோதரரைப் பார்க்கிலும் உயர்ந்த நிலையில் இருந்ததற்கு காரணம், அவர் இறைவனை நோக்கி செய்த வேண்டுதல் ஆகும்.;
அன்பானவர்களே.. விருப்பங்கள், ஆசைகள், இல்லாத மனிதர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால் இவற்றின் அளவுகோல்கள், மனிதருக்கு மனிதர் வேறுபடும்.
வழக்கமாக நாம் நம்முடைய தேவைகளுக்காக இறைவனை நோக்கி வேண்டுதல் செய்யும்போது, நம்முடைய அப்போதைய தேவைகளுக்காக மாத்திரம் இறைவனை நோக்கி வேண்டுகிறோம். ஆனால் தேவனோ வாழ்நாளில் நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் தீர்க்கமாக அறிந்திருக்கிறார்.
தேவைகளோடு இறைவனை நோக்கி வேண்டிய சில பக்தர்களையும், இறைவன் அவர்களுடைய வேண்டுதல்களுக்கு எவ்வாறு பதில் அளித்து இருக்கிறார் என்பதை பற்றியும், வேதாகமத்தில் இருந்து பார்க்கலாம்.
சாலமோன் என்ற ஒரு பிரபலமான மன்னர் இருந்தார். இவர் இளவயதிலேயே மன்னராக பதவி ஏற்றிருந்தார். இவர் தன்னுடைய ஆட்சியின் கீழ் வாழ்கிற ஏராளமான மக்களை, நீதியாக, நேர்மையாக, ஆளும்படிக்கு தேவையான அறிவிற்காக, ஆற்றலுக்காக தேவனை நோக்கி வேண்டினார். இவருடைய வேண்டுதல் இறைவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், பிரியமாகவும் இருந்தது. ஏனெனில் இவர் தனக்காகவோ, அல்லது தன்னுடைய எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, இறைவனிடம் வேண்டாமல் தன் நாட்டு ஜனங்களை நீதியாக ஆட்சி செய்வதற்கு வேண்டிய அறிவை, ஆற்றலை வேண்டினார். சாலமோன் செய்த வேண்டுதலுக்கு இறைவன் அந்த நாளிலேயே பதில் அளித்தார்.
வேதம் சொல்கிறது: 'அன்று ராத்திரியிலே தேவன் சாலமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்' (2 நாளாகமம் 1:7). அதற்கு சாலமோன் 'இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்'. (2 நாளாகமம் 1:10)
அப்பொழுது தேவன் சாலமோனை நோக்கி “இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐஸ்வரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுளையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினால், ஞானமும், விவேகமும், தந்திருக்கிறது மல்லாமல், உனக்கு முன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐஸ்வரியத்தையும் சம்பத்தையும், கனத்தையும் உனக்குத் தருவேன்" என்றார். (2 நாளாகமம் 1:12)
அன்பானவர்களே, மன்னர் சாலமோன் ஆண்டவரிடத்தில் கேட்டது ஞானம் மட்டுமே. அப்போதைய அவருடைய அத்தியாவசியமான தேவை ஞானம்தான். ஆனால் இறைவனோ ஞானத்தை அளவில்லாமல் அருளினது மட்டுமல்லாமல், அவன் கேளாததையும், கனத்தையும், எதிரிகள் மேல், வெற்றியையும் தந்தார். இதுதான் இறைவனுடைய அன்பு!
இன்னொரு சம்பவம்
யாபேஸ் என்றொரு மனிதர் இருந்தார். யாபேஸ் என்றால் ஹீப்ரு மொழியில் துயரத்துடன் பிறந்தவர்' என்று பொருள்படும். அவர் பிறக்கும்பொழுது அவருடைய தாய் மிகவும் துக்கத்தில் இருந்தார். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். (1 நாளாகமம் 4:9)
ஒரு குழந்தை புதிதாக இந்த உலகத்தில் பிறக்கும்பொழுது மட்டற்ற மகிழ்ச்சிதான் இருக்கும். ஆனால் ஒரு பிள்ளை பிறக்கும்பொழுது தாய் துக்கத்தில் இருக்கிறாள் என்றால் அதற்கு வறுமை, வேதனை, வாழ்க்கையின் மீதுள்ள வெறுப்பு இவைகள்தான் காரணமாக இருக்க முடியும்.
துக்கத்தோடு பிறந்த இந்த யாபேஸ் வளர்ந்த பிறகு தன் சகோதரரைப் பார்க்கிலும் உயர்ந்த நிலையில் இருந்தான். காரணம், யாபேஸ் இறைவனை நோக்கி செய்த வேண்டுதல் ஆகும்.
“யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி, 'தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையை பெரிதாக்கி, உமது கரம் என்னோடு இருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு, அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்' என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்” (1 நாளாகமம் 4:10)
துக்கத்தோடு பிறந்த யாபேஸ் இறைவனை நோக்கி வேண்டுதல் செய்து இறைவனிடத்தில் இருந்து பலவிதமான நன்மைகளை பெறுகிறார்; அவருடைய வருமானம் பெருகி, எல்லைகள் விரிவடைகிறது. இறைவனுடைய கரம் அவரோடு இருந்ததால் எந்த தீங்குகளும் அவரை அணுகாமல் பாதுகாக்கப்படுகிறார்.
இந்த இரு சம்பவங்களிலும் நாம் பார்ப்பது; தேவன் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்ற போதுமானவராக இருக்கிறார். ஆனால் நம்முடைய வேண்டுதல்கள் இறைவனுக்கு பிரியமாய் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் தாமதமானாலும் அது நிச்சயமாக நிறைவேறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
'கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்' (சங்கீதம் 37:4).
'தாமதித்தாலும் அதற்கு காத்திரு, அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பது இல்லை'. (ஆபகூக் 2:3)
ஆகவே நம்முடைய தேவைகளை, வேண்டுதல்களை, விருப்பங்களை, இறைவனிடத்தில் கேட்டு பெறுவோம், ஆமென்.
-டாக்டர் ஒய். ஆர்.மானெக்ஷா, நெல்லை.