ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவின் ஒரு பகுதியாக சப்பர பவனி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.;
ஆறுமுகநேரி வடக்கு பஜாரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை புனித அன்னம்மாள் முழு உருவ சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. மடத்துளை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் புடைசூழ வந்த சப்பரம், வடக்கு பஜாரில் உள்ள புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. அங்கு ஆராதனை நடைபெற்றது. பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட சப்பரம், மெயின் பஜார் வழியாக வடக்கு சுப்பிரமணியம் மேட்டுவிளை வழியாக மடத்துளை புனித சவேரியார் ஆலயத்தை வந்தடைந்தது.
திருவிழாவின் 10-ம் நாளான இன்று காலை 7.30 மணியளவில் புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. ஆறுமுகநேரி பங்குத்தந்தை அந்தோணி சகாய வளன் அடிகளார், தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி நடுவன இயக்குனர் பென்சிலின் லூஸன் அடிகளார், மறை மாவட்ட ஆற்றுப்படுத்துதல் சபையின் தந்தை சுவக்கிரன் அடிகளார், தூத்துக்குடி மறைமாவட்ட பொது நிலையினர் பணியாகத்தின் இயக்குனர் சகாயராஜ் வல்தாரிஸ் அடிகளார் ஆகியோர் ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து கொடி இறக்கம் நடந்தது. அதன்பின்னர் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.