தமிழக வெற்றிக் கழகத்தை சீமான் வம்புக்கு இழுப்பது ஏன்? - பரபரப்பு தகவல்கள்
தவெகவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.;
சென்னை,
நடிகரும், இயக்குநருமான சீமான் தலைமையில் தமிழகத்தில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, முதன்முதலில் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 234 தொகுதிகளில் களம் இறங்கி ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் 1.1 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி, பெண்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில், மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களில் பெண்களை களம் இறக்கியது. அக்கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 3.9 சதவீத வாக்குகள் கிடைத்தன.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 6.58 ஆக உயர்ந்தது. 170-க்கும் அதிகமான தொகுதிகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்தது.
கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட அக்கட்சிக்கு 32 லட்சம் வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் 3-வது இடத்தையும், ஏனைய 35 தொகுதிகளில் 4-வது இடத்தையும் பிடித்து நாம் தமிழர் கட்சி அசத்தியது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதனால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி உயர்ந்தது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் சட்டசபைக்குள் நுழைவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கணக்குப்போட்டு வைத்திருந்தார். ஆனால், நடிகர் விஜய்யின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகமும் சட்டசபை தேர்தலை முதன்முறையாக சந்திப்பதால், அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியையும் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
இது நாம் தமிழர் கட்சியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக் கட்டையாக அமையும் என்று கூறப்படுகிறது. இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடே, இப்போதைய அவரது பேச்சில் தமிழக வெற்றிக் கழகத்தை சீண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்தை வம்புக்கு இழுப்பதுபோல் சில கருத்துகளை கூறினார். அவர் பேசும்போது, "த.வெ.க. கொள்கை என்னவென்று கேட்டால், தளபதி.. தளபதி.. என்று அக்கட்சி தொண்டர்கள் சொல்கிறார்கள். அது எனக்கு தலைவலி என்று கேட்டது. அதேபோல், நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால் டி.வி.கே. என்று சொல்கிறார்கள். எனக்கு டீ விற்க வந்ததாக கேட்கிறது" என்று கூறிய சீமான், த.வெ.க. தொண்டர்களை அணிலுடன் ஒப்பிட்டும் பேசினார்.
இது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. என்றாலும், சீமான் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிப்பதற்கு காரணம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.