அதிமுக பலவீனமாக உள்ளது; சரி செய்யவே நான் இருக்கிறேன்: சசிகலா பேட்டி
பாஜக கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.;
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பாஜக கூட்டணியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக தற்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவதுதான் என்னோட பணி என சொல்லி வருகிறேன். நிச்சயமாக அதை செய்வேன். பலவீனத்தை சரி செய்யாவிட்டால் ரொம்ப சிரமமாகிவிடும். இதை யாரும் புதிதாக கற்றுக்கொண்டு செய்ய முடியாது. இவர்கள் செய்து வைத்துள்ள சிக்கல்களை அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும். அதுதான் உண்மை" என்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அக்கட்சியில் உள்ள சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை கண்டித்து அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது சசிகலா மேற்கண்டவாறு பதிலளித்தார்.