நகராட்சி தலைவர் தேர்தல்: சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக

திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா போட்டியிட்டார்.;

Update:2025-08-18 14:40 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்கிற ராஜூ துணைத்தலைவராக உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் உமா மகேஸ்வரியும், அதிமுக முத்துலட்சுமியும் தலா 15 வாக்குகள் பெற்றனர். சமநிலையில் இருந்ததால் குலுக்கல் முறையில் உமா மகேஸ்வரி தேர்வானார்

இதனையடுத்து அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 29 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது. வாக்கெடுப்பில் 28 ஆதரவு வாக்குகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. உமா மகேஸ்வரி பதவியை இழந்தார்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்மானம் மீது ஜூலை 17-ம் தேதி மறைமுக வாக்கெடுப்பு நடத்தவும், அதன் முடிவுகளை ஜூலை 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 18-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில், நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர்.

நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார். இதன்மூலம் சங்கரன்கோவில் நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்