அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் என்ன ? மேயர் பிரியா பேட்டி
அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.;
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா கூறியதாவது ,
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். பணி பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு உண்டு என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன.அவர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம். என தெரிவித்தார் .