திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - முத்தரசன் வாழ்த்து
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார்.;
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட காவலர் குடும்பம், தற்போதுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சி குப்பத்தில் வாழ்ந்து வந்தபோது, அந்த குடும்பத்தின் நான்காவது குழந்தையாக 1950 டிசம்பர் 12 பிறந்த சிவாஜி ராவ் கெய்க்வாட். இவர் 1975-ம் ஆண்டில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரால் “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் “ரஜனிகாந்தாக” அறிமுகப்படுத்தப்பட்டார்.
அன்று தொடங்கிய திரையுலக வாழ்க்கை பொன்விழா காணும் இனிய தருணத்தில், அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கி வருகிறார்.
காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பொதுக் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டி வந்த சமூக அக்கறை கொண்டவர். பொன்விழா காணும் அவரது திரையுலக வாழ்வு நூறாண்டு விழா கண்டு சிறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.