தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-08-14 10:24 IST

திருச்சி,

திருச்சி தபால் நிலையத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி பொன்மலை பகுதியில் தபால் வினியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் தபால் நிலைய ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம் காணக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் கோபாலகிருஷ்ணன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணனை பொன்மலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 5-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் காவலர் ஒழுங்கு விதிக்கு மாறாக செயல்பட்டதால் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்