'கூலி' படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.;
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'கூலி' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இன்று ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் கூலி படத்தின் முதல் காட்சி இன்று காலை 6.30 மணிக்கு வெளியானது. ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் கூலி படத்தினை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் 'கூலி' படத்தின் சிறப்பு காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படக்குழுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூலி படம் மீதான உங்கள் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி முதல்-அமைச்சர் சார்" என்று தெரிவித்துள்ளார்.