ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்

திருவள்ளூரில், ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;

Update:2025-08-14 08:56 IST

சென்னை,

தமிழக பா.ஜனதாவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் "பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்துக்காக அரசு பள்ளியில் சேர்க்க தி.மு.க. அரசு மறுக்கிறது. இதுதான் சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில கல்விக்கொள்கையின் ஒரு பகுதியா?" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த மாணவன் தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இதனை பலரும் பகிர்ந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவரின் சேர்க்கை நீக்க பதிவேடு, வருகை பதிவேடையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வீடியோவில் இடம்பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 2023-ல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாக கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. 11.8.25 அன்று அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாக கூறி மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.

ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த மாணவனுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் ஆதார் அட்டை எடுப்பதில் சிக்கல் இருந்துள்ளது. ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும்.

அதுகுறித்த வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த மாணவனுக்கு கோட்டாட்சியரால் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வதந்தியைப் பரப்பாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்