தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் உறுதி

என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-14 15:34 IST

சென்னை,

தூய்மை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்களை பட்டியலிட்டு, தனது எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் பதிவிட்டு இருப்பதாவது;

"நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

* தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

* தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

* தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

* பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!

இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்