மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்: தவெக திட்டவட்டம்
2026 தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நேற்று சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-
தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவினர் தற்போது வீடு, வீடாக சென்று மக்களுக்கு என்ன தேவை? என்பதை கேட்டு வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பே நமது தொண்டர்கள் மக்களுக்கு தேவையான பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் திகழ்கிறார். இதனால் 2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்பது உறுதி. கட்சியின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் மாபெரும் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில், தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.