26ம்தேதி தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறார்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமையில் நடைபெற்றது.;
தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு திறக்கப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் 13-ம்தேதி சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் தற்போது இரு தனியாா் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையத்தை ரூ.381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். சா்வதேச தரத்தில் விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற ஜூலை 26-ம் தேதி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா்.
எனவே பிரதமர் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.