குவைத்திற்கு வேலைக்கு சென்ற கணவர் மாயம்: நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி கலெக்டரிடம் மனைவி மனு

எனது கணவர் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத்திற்கு சென்று மறுநாள் அதிகாலை குவைத்து சென்றடைந்ததாக தெரிவித்தார்.;

Update:2025-07-22 21:55 IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி ஈஸ்வரி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், "எனது கணவர் கடந்த கடந்த 16.7.2025 அன்று சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத்திற்கு சென்று மறுநாள் அதிகாலை குவைத்து சென்றடைந்தார். அவர் குவைத்தில் இறங்கியதும் வாட்ஸ்அப் மூலம் நான் குவைத் விமான நிலையம் வந்து விட்டதாகவும், தனது நண்பர்களுக்கு தகவலும் கொடுத்துவிட்டதாகவும் போன் செய்தார். பின்னர் தனது கைரேகை சரியாக பதியாத காரணத்தினால் போலீஸ் விசாரணையில் தான் இருப்பதாகவும் கூறினார். பின்னர் தனது கைபேசி சார்ஜ் இல்லாததால் செயலிழந்து விடும் எனவும் கூறினார்.

அதன் பின்னர் எங்கள் ஊர் முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் அனுப்பி இருந்தார். மேலும் நான் ஐ.எம்.ஓ. செயலி மூலம் 17ம்தேதி போன் செய்ததற்கு, என் மகனிடம் நான் அம்மாவிடம் பிறகு பேசுகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. அவர் வேலைக்கு சென்ற நிறுவனத்தில் கேட்டதற்கு, அவர் எங்கள் நிறுவனத்திற்கு வரவில்லை என தகவல் அளித்தனர்.

மேலும் எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தபோது, அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன எனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்