ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
ஆர்.எஸ். எஸ்.தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரி வருகையால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் தங்கி இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத்தை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நாகர்கோவில் மாநகராட்சி பா.ஜ.க. வார்டு கவுன்சிலரும், குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவருமான ஜவான் அய்யப்பனும் உடனிருந்தார்.
அகில பாரத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன்பகவத் கடந்த 18-ந்தேதி மாலை கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் 4 நாட்கள் தங்கி இருந்து கேந்திராவின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தங்கி இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கேசவ விநாயகம், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினர்.
இது முக்கியம் வாய்ந்த சந்திப்பாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 4 நாட்கள் தங்கி இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று தனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். பின்னர்அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆர்.எஸ். எஸ்.தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரி வருகையால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.