சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக மாற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு- திடீர் முடிவு ஏன்?

சாத்தான்குளம் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன் என்று மதுரை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார்.;

Update:2025-07-23 05:36 IST

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஏறக்குறைய நிறைவு பெற்று, தீர்ப்பு வழங்கப்படும் நிலையை எதிர்நோக்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்துகுமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் மனு அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ள இந்த வழக்கில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகவே இருக்கும் என சட்டவல்லுனர்கள் கூறினர். மேலும் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அரசு தரப்பு சாட்சியாக மாறுவேன் என மனுத்தாக்கல் செய்திருப்பது வழக்கை திசைமாற்றும் செயலாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்