கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-2026-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் வளமிகு வட்டாரப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 ஊரக கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் பால்வளத்தையும் மேம்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு கறவை பசுவிற்கு நாளொன்றுக்கு 3 கிலோ ஊட்டச்சத்துக்கள் வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ உணவு வழங்கப்படும். மேலும் 1 மாதத்திற்கு 1 கிலோ தாது உப்புக்கலவை வீதம் 4 மாதத்திற்கு 4 கிலோ 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண்கள்/ விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்டவர்கள்/ ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (Sc-29%, ST-1%) தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் அளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் வளமிகு வட்டாரப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.