கிருஷ்ணகிரி: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - அரசு பள்ளி ஆசிரியர் கைது
பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.;
கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் (50 வயது). கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பள்ளியில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டார கல்வி அலுவலர் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலகிருஷ்ணனை நேற்று மாலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.