பிரதமர் மோடி வருகை: திருச்சியில் 27-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.;
பிரதமர் மோடி, திருச்சி, டிரோன், PM Modi,Trichy,Drones
திருச்சி,
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு ராணுவ விமானத்தில் தூத்துக்குடிக்கு வரும் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்கிறார். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
அன்று இரவே தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின்னர் கார் மூலம் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்குகிறார்.
மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பிரகதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனமும் செய்கிறார். மாலையில் மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், அதிரடிப்படை போலீசார் மற்றும் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்.பி.ஜி. குழுவினர் என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள எஸ்.பி.ஜி. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள்.
பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் திருச்சி சுற்றுலா மாளிகை அருகிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர பகுதியில் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 4 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீறி இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.