பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை; ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்...!
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.;
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு கலாசார அமைச்சகத்தால் இந்த ஆடித் திருவாதிரை விழா 27-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். கேரளாவில் இருந்து நாளை இரவு 7.50 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
அங்கு இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
அங்குள்ள அரசினர் விடுதியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் 'ரோடு ஷோ'வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.
இதையடுத்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வரும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி கோவிலில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்ய உள்ளார். மேலும், கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
பின்னர், அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் சுமார் 1.30 மணியளவில் கோவிலில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து 2.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி ரூ.1,030 கோடியில் நிறைவடைந்த ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை, நாகர்கோவில் டவுண்-கன்னியாகுமரி பிரிவில் 21 கிலோ மீட்டர் நீள இரட்டை ரெயில் பாதை, ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு இடையே 12.87 கிலோ மீட்டர் நீள வழித்தடம், நெல்லை-மேலப்பாளையம் இடையே 3.6 கிலோ மீட்டர் நீள இரட்டை ரெயில் பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.