அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க ரூ.15½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கக் கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அளிக்கக் கூடிய பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன. அந்த வகையில் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.8 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரம் என மொத்தம் ரூ.15 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி விவரம், தற்காப்பு கலை பயிற்சிகள் விவரம், பயிற்சியாளர் விவரம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.
வாரத்தில் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.