அஜித்குமார் கொலை வழக்கு: டாக்டர்கள் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, அவருடைய தாயாரிடம் நேற்று 3 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்தவர், அஜித்குமார் (வயது 29). இவர் மீது மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா, அளித்த நகை திருட்டு புகாரின் பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் அவருடைய தாயார் சிவகாமியை விசாரணைக்கு அழைத்து இருந்தநிலையில் மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஆஜரானார்கள். இருவரிடமும், சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நிகிதாவும், தாயாரும் கடந்த 27-ந் தேதியன்று மதுரையில் இருந்து மடப்புரம் கோவிலுக்கு எப்போது சென்றார்கள், மதுரையில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு சென்றார்களா, அணிந்திருந்த நகைகளை எப்போது கழற்றி காரில் வைத்தார்கள், என்னென்ன நகைகள் வைக்கப்பட்டன, கோவிலுக்கு சென்ற உடன் அஜித்குமாரை எப்போது சந்தித்தீர்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அங்கு நடந்தது என்னென்ன? அஜித்குமார் பணம் கேட்டாரா, திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் அஜித்குமார் குறித்து புகார் அளித்தீர்களா, அன்றைய தினம் போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன, புகார் நகல் உள்ளதா, அதற்கு போலீசில் அத்தாட்சி ரசீது தந்தார்களா, அஜித்குமார் குறித்து போலீசில் என்ன கூறினீர்கள்? யார், யாரிடம் போனில் பேசினீர்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பினர்.
இதற்கிடையே, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மதியம், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். டீன் அருள்சுந்தரேஷ் குமாரை சந்தித்து, அஜித்குமாரின் உடலானது மதுரை அரசு மருத்துவமனைக்கு எப்போது கொண்டு வரப்பட்டது, அன்றைய தினம் அரசு மருத்துவமனையில் என்னென்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர்.
மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவணனுடன், சி.பி.ஐ. அதிகாரிகள் சில விளக்கங்கள் கேட்டனர். அரசு மருத்துவமனையில் அஜித்குமார் உடல் வைக்கப்பட்ட அறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனை ஆவணங்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் உள்ளிட்டோர் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், பிணவறை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் தரவுகளை பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உடற்கூராய்வு செய்த மூன்று டாக்டர்களுக்கு இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த காட்சிகளில், சம்பவம் நடந்த நாளிலும் அதற்கு முந்தைய நாளும், தனிப்படை போலீசார் அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்களை எப்போது, எப்படி விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.