புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை - போலீசார் குவிப்பு
புதுக்கோட்டையில் அண்ணன்-தம்பி வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் அதே பகுதியை சோ்ந்த கண்ணன் (வயது 35), கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அவர்களை கொலை செய்தது யார்? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.