அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
சென்னையை ஐகோர்ட்டில் டி.சத்தியகுமார் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய 4 பேரை அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து கடந்த 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னையை ஐகோர்ட்டில் டி.சத்தியகுமார் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமலும், உரிய நடைமுறைகளை பின்பற்றாமலும், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லாது. செய்தித் தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளதாக பத்திரிகை செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்தது, நிர்வாக அத்துமீறல் ஆகும்.
இதன் மூலம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். உத்தரவை ரத்து செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.