பிறப்பு சான்றிதழில் பெயரை திருத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது
கல்லூரி மாணவியின் பிறப்பு சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;
தரகம்பட்டி,
ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் மனைவி ரேவதி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி ஆகும். இவரது மகள் பவித்ரா தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பவித்ராவின் பிறப்பு சான்றிதழில் பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. ஆனால் பள்ளி சான்றுகள், ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் பவித்ரா என்று சரியாக இருக்கிறது.
இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் தனது மகளின் பெயர் தவறாக இருப்பதால் பிற்காலத்தில் பிரச்சினை வரும் என கருதிய ரேவதி, கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பெயர் திருத்தம் செய்வதற்காக கடந்த 1½ ஆண்டுகளாக முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை நேரடியாக சந்தித்து தனது மகளின் பிறப்பு சான்றிதழில் பெயரில் உள்ள எழுத்து பிழையினை திருத்தம் செய்து தரக்கோரி விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயரில் உள்ள எழுத்துப்பிழையினை சரிசெய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேவதி இதுகுறித்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேவதியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து சவுந்தரவல்லியிடம் கொடுக்க கூறினர். அதன்படி நேற்று மதியம் ரேவதி, லஞ்ச பணத்தை சவுந்தரவல்லியிடம் கொடுத்தார். அதனை வாங்கியபோது சவுந்தரவல்லியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.