பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண்ணை மிதித்து கொன்ற கள்ளக்காதலன்
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.;
மாதவரம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி அந்த வீட்டில் சரஸ்வதி, அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கொளத்தூர் போலீசார் சரஸ்வதி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சரஸ்வதியுடன் ஆண் ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அவர், சரஸ்வதியின் கள்ளக்காதலன் என்பதும், சரஸ்வதியின் செல்போன் மற்றும் நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.
எனவே கள்ளக்காதலனே சரஸ்வதியை கொன்று நகை, செல்போனை திருடிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா நகரில் சலவை நிலையம் நடத்தி வரும் மத்திய பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த முகமது அன்சாரி (37) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்தான் சரஸ்வதியை கொலை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே முகமது அன்சாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 7 மாதங்களுக்கு முன்பு எனது கடைக்கு சரஸ்வதி வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம். அதன்பிறகு சரஸ்வதி என்னிடம் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். நாளடைவில் எங்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவருடன் கோபித்துக்கொண்டு கொளத்தூர் வந்துவிட்டார். பின்னர் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அக்கம் பக்கத்தினரையும் அப்படியே நம்ப வைத்தோம்.
சரஸ்வதி அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தார். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இருவரும் மது அருந்தினோம். அவள் போதையில் மயங்கி கீழே படுத்து விட்டாள். அதன்பிறகு நான், அவரது வயிற்றிலும், தலையிலும் மிதித்து கொலை செய்தேன். பின்னர் அவள் அணிந்து இருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன். எனது சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். ஆனாலும் என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்" என்று கூறினார்.