வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்காக ஊரப்பாக்கத்தில் உள்ள மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து 4 மாதங்கள் ஆகியும் இவருக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஊரப்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வரும் காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (55 வயது) என்பவரிடம் கேட்டார். அதற்கு ஏழுமலை ரூ.13 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படும் என்று ராஜசேகரிடம் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜசேகர், இதுகுறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.13 ஆயிரத்தை ராஜசேகரிடம் கொடுத்து, அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி ராஜசேகர் ஊரப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்று ஏழுமலையிடம் ரசாயனம் தடவிய ரூ.13 ஆயிரத்தைக் கொடுத்தார். அதனை ஏழுமலை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.