தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.;

Update:2025-07-26 13:03 IST

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளையும் தொடக்கி வைக்கிறார்.

அதன்பின்னர் இரவு திருச்சி செல்லும் பிரதமர் மோடி அங்கு தங்குகிறார். பின்னர், நாளை அரியலூரின் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து நாளை மாலை டெல்லி திரும்புகிறார்.

இந்நிலையில் , தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் கொடுக்கிறார்.

 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலுடன் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளது.

இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2025) தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த மனுவினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின்போது, கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்