ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி - மத்திய மந்திரி தகவல்
சென்னை ஐ.சி.எப்.பில் ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.;
ரெயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் தேவை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வந்தே பாரத், அம்ரித் பாரத் ஆகிய ரெயில்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில், ஹைட்ரஜன் ரெயிலை உற்பத்தி செய்ய மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டது.
கடந்த ஆண்டு நடந்த மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவில் 35 ஹைட்ரஜன் ரெயில்கள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 10 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. தெற்கு ரெயில்வே அதிகாரிகள் குழுவினர், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது, சீரான வேகத்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியா 1,200 எச்.பி. திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயிலை தயாரித்து வருகிறது. சென்னை ஐ.சி.எப்.பில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்' என கூறியுள்ளார்.
ஹைட்ரஜன் ரெயில் மொத்தம் 2 என்ஜின்களும், 8 பெட்டிகளையும் கொண்டது. முதல் என்ஜின் தயாரிப்பு பணி முழுமையாக முடிந்துள்ளது. 2-வது என்ஜின் தயாரிப்பு பணி 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் முடிந்து, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த ரெயில் அடுத்தக்கட்ட சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்படும் என ஐ.சி.எப்.. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.