திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார்.;
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக இன்று தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்த நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரதமர் மோடி கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றார். அங்கு இன்று இரவு தங்குகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பிற்பகல் 2.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.