முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.;

Update:2025-07-26 13:33 IST


தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.

இந்நிலையில் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பவானி ஆற்று கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (26-07-2025) காலை 11.00 மணியளவில் 99.00 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்றும் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 3,000 கனஅடி முதல் 10,000 கன அடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



Tags:    

மேலும் செய்திகள்