துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் வீரபாண்டியன் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீரபாண்டின் விடுமுறையில் கம்மாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது குழந்தைகள் கேட்டதற்காக பலூன் சுடும் ஏர்கன் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்தார்.
பின்னர் அந்த துப்பாக்கியை வீரபாண்டியன் அஜாக்கிரதையாக கையாண்டதாக கூறப்படுகிறது. இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ரப்பர் குண்டுகள் அவரது தாய் பத்மாவதி (57) என்பவரின் கால் மற்றும் தொடைகளில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருந்து கடைக்கு அழைத்து சென்றனர்.
முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு பத்மாவதி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் மற்றும் தொடைகளில் இருந்த ரப்பர் குண்டுகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பத்மாவதி கோபாலபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவம் நடந்த மறுநாள் வீரபாண்டியன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஆனால் நடந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது. பின்னர் இது குறித்து உளவுத்துறை போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் கம்மாபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன் பேரில், கம்மாபுரம் போலீசார் நேற்று மாலை வீரபாண்டியனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து துப்பாக்கியை அஜாக்கிரதையாக கையாண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
இந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.