தணிக்கைத் துறைகள் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-07-26 02:39 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆட்சியில் இல்லாதபோது சமூக நீதி, வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலன் எனப் பேசும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றிற்கு முற்றிலும் முரணான நடவடிக்கைகள் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், தணிக்கைத் துறைகளின் செயல்பாட்டை நீர்த்துப் போகச் செய்பும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்பட்ட நிதித்துறை அரசாணை எண். 102 நாள் 07-04-2022-ன்படி, தணிக்கை தலைமை இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கான நெறிமுறைகளும், வரையறைகளும் வகுக்கப்பட்டன. மேற்படி ஆணையின்படி, உள்ளாட்சி நிதித் தணிக்கை கூட்டுறவு தணிக்கை, பால் கூட்டுறவுகளின் தணிக்கை, மாநில அரசு தணிக்கை, இந்து சமய நிறுவனங்களின் தணிக்கை உள்ளிட்ட தணிக்கைத் துறைகளை தணிக்கை தலைமை இயக்குநர் மேற்பார்வையிட வேண்டும். இது தவிர, தனியார் துறையில் நல்ல அனுபவம் உள்ளவரையும் தணிக்கை தலைமை இயக்குநராக நியமிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்போதே. இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், தி.மு.க. அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதன் விளைவு இன்றைக்கு தணிக்கைத் துறை பல்வேறு குளறுபடிகளை சந்தித்து வருகிறது.

முதலில் தலைமை தணிக்கைத் துறை இயக்குநர் பதவிக்கு இந்திய கணக்குத் தணிக்கை அலுவலர் நியமிக்கப்பட்டதாகவும், அவருடைய காலத்தில் நடைமுறைகளில் தாமதங்கள், தணிக்கைத் தடைகளுக்கு பொறுப்பான அலுவர்கள் ஓய்வு பெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டதன் காரணமாக அவர் பதவி விலகியதாகவும், இதனைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பினை நிதித் துறை கூடுதல் செயலாளர் கவனித்து வருவதாகவும், இவர் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் தணிக்கைத் துறையில் உள்ள உயர் அலுவர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், ஒவ்வொரு தணிக்கைத் துறைக்கும் அந்தந்த துறையிலிருந்தே மூத்த அதிகாரிகள் இயக்குநராக நியமனம் செய்யப்படலாம் என்ற நிலை இருந்தும், நிதித் துறை அதிகாரிகளே இயக்குநர் பதவியில் நியமிக்கப்படுவதாகவும், இதனால் அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு பறிபோவதாகவும், தணிக்கைத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தணிக்கைத் தடைகளுக்கு பொறுப்பான அலுவலர்கள் தடைகள் நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஓய்வு பெற அனுமதிக்கப்படும் நிலையில் தணிக்கைத் தடைகளை நீக்கம் செய்யும் அதிகாரம் அந்தந்த துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், உயர் மட்டக் குழு என்ற பெயரில் முறைகேடுகள் மூடி மறைக்கப்படுகின்றன என்றும் தணிக்கைத் துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் மேற்கொண்டு வந்த தணிக்கை இந்த அரசால் கைவிடப்பட்டுள்ளதாகவும், அவசர கோலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கணினி வழி நடைமுறையின் காரணமாக 400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தணிக்கை மேற்கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளதாகவும், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் ஆண்டுக் கணக்குகள் இல்லாமலேயே தணிக்கைப் பணியை தொடங்குமாறு தணிக்கையாளர்கள் நிர்பந்தப்படுத்தப்படுவதாகவும், உதவி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், அனைத்துத் தணிக்கைத் துறைகளையும் ஒருங்கிணைத்து பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தணிக்கைத் துறைகளில் பணிபுரிவோர் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் தணிக்கைத் துறைகளின் செயல்பாட்டினைக் குறைப்பதிலும், வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதிலும், முறைகேடுகளை மூடி மறைப்பதிலும் தி.மு.க. அரசு கவனம் செலுத்துவது தெள்ளத் தெளிவாகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி தணிக்கைத் துறைகள் சுதந்திரமாக செயல்படவும், அங்கு பணிபுரிவோருக்கு பதவி உயர்வுகளை வழங்கவும், தணிக்கைப் பயண நேரத்தை குறைக்கவும், முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்